ராமேசுவரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ராமேசுவரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:32 PM IST (Updated: 20 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம், 
இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 
மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடித்தது. இதில் 43 மீனவர்கள், இலங்கையின் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்று சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமில் நடத்திய விசாரணைக்குபின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் அந்த 55 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல்பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். ராமேசுவரம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், சகாயம், எமரிட் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும் மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சேர்ந்த சில பெண்கள் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டனர். 
நாளை உண்ணாவிரதம்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், இலங்கை கடற்படையை கண்டித்தும் மீனவர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதில் நாளை (புதன்கிழமை) தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே காலை 9 மணி முதல் மாலை வரை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும், வருகின்ற 31-ந்தேதிக்குள் 55 மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்டு, ஜனவரி 1-ந் தேதியன்று மாலை தங்கச்சிமடம் பகுதியில் அனைத்து மீனவர்களும் பொது மக்களும் சேர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
வேலை நிறுத்தம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கதறி அழுதபடியே அமர்ந்திருந்தனர்.
55 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் தொடங்கினர். எனவே 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Next Story