பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் கரும்பு-மஞ்சள்


பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் கரும்பு-மஞ்சள்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:02 PM IST (Updated: 20 Dec 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு-மஞ்சள் தயாராகி வருகிறது. தொடர் மழையால் இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர், 
பொங்கல் பண்டிகைக்கு கரும்பு-மஞ்சள் தயாராகி வருகிறது. தொடர் மழையால் இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. 
கரும்பு-மஞ்சள் தயார்
 தமிழர் திருநாளாக கொண்டாடப்படும்  பொங்கல் பண்டிகை அன்று அனைத்து வீடுகளிலும்  கரும்பு மற்றும் மஞ்சள் இடம்பெறும். இதற்காக தற்போது பல்வேறு இடங்களில் விவசாயிகள் கரும்பு மற்றும் மஞ்சள்  அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்காக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, கல்லல், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு மற்றும் மஞ்சள் பயிர்கள் நடவு செய்து அறுவடைக்கு தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 
திருப்பத்தூர் அருகே நாச்சியார்புரம் பகுதியில் கரும்பு மற்றும் மஞ்சள் பயிரிட்டு பராமரித்து வரும் விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் பொங்கல் விழாவிற்காக கரும்பு மற்றும் மஞ்சள் பயிர்கள் பயிரிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடும் பாதிப்பு
கரும்பு பயிர் நடவு செய்ய 6 மாதத்திற்கு முன்னதாக பயிரிட்ட பயிருக்கு போதிய அளவு தண்ணீர் மற்றும் உரம் உள்ளிட்டவைகள் வைத்து பராமரிப்பு செய்தால் மட்டுமே நல்ல விளைச்சலை பெற முடியும். பொதுவாக ஆண்டு தோறும் இந்த பகுதியில் பெய்யும் பருவ மழையை நம்பி இந்த பயிர்கள் நடவு செய்தால் அவை அறுவடை செய்யும் சமயத்தில் போதிய அளவில் விளைச்சல் கொடுத்து விவசாயி களுக்கு பயனாக இருக்கும். 
ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நடவு செய்த கரும்பு பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தும், சில இடங்களில் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் விளைச்சல் இல்லாமல் வளர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பெருமளவு கரும்பு பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. இருப்பினும் கரும்பு பயிர் நடவு செய்யும்போது செலவு செய்த முதலீடு செய்த பணம் மட்டும் கிடைத்தால் போதுமானது. 
அறுவடை
 தற்போது பயிரிட்ட மஞ்சள் பயிர் மட்டும் விளைச்சலுக்கு வந்துள்ளது. இன்னும் 10முதல் 20 நாட்களுக்குள் இந்த பயிர்கள் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டை போல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து இங்கு விளைந்த கரும்பு மற்றும் மஞ்சள் பயிரை விற்பனைக்காக வாங்கி செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story