திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடத்தப்படும்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சர் சாமி தரிசனம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலில் மூலவரான வன்மீகநாதர், கமலாம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கமலாலய குளத்தின் தென்கரை பகுதி தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கமலாலய குளத்தின் தென்கரை பகுதி சீரமைப்பு பணி மற்றும் ஆழித்தேரோட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கமலாலயம் என்னும் இந்த திருக்குளம் தொன்மை காலம் முதல் புராண, வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாகும்.
இந்த திருக்குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1,060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் அளவுகள் கொண்ட பெரிய தெப்பக்குளமாக உள்ளது.
பணிகள் தொடக்கம்
கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையில், குளத்தின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதியில் 101 அடி சரிந்து விழுந்துள்ளது. மேலும் 47 அடி சுவர் சேதமடைந்துள்ளது.
இதனை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் 148 அடி தடுப்புச்சுவர் மீண்டும் அமைத்திட நிர்வாக ரீதியாக அறநிலையத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிகள் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆழித்தேேராட்டம்
தமிழக கோவில்களில் இந்த கோவில் மிகவும் தொன்மையானதாகும். இந்த கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்சமாக பிரதானமானது ஆழித்தேராகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலின் ஆழித்தேர் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ பெருவிழாவின் நிறைவாக நடந்து வருகிறது.
இந்த தேர்த்திருவிழாவானது கடந்த 25.3.2021 ஆயில்ய நட்சத்திரத்தில் நடந்தது. அடுத்த ஆண்டு(2022) மார்ச் மாதம் 15-ந் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே ஆழித்தேரோட்ட விழாவிற்கு முன்பாகவே சேதமடைந்த தென்கரை சுற்றுச்சுவர் மற்றும் தெற்கு வடம்போக்கி வீதி சாலையினை சீரமைத்து ஆழித்தேரோட்டத்தினை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் குளம்
முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவாரூர் ஒன்றியம் திருக்காரவாசல் கிராமத்தி்ல் உள்ள தியாகராஜா கோவிலின் கோவில் குளம் மற்றும் தேரினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, இந்து சமய அறநிலையத்துறை(கட்டுமானம்) செயற்பொறியாளர் மாசிலாமணி, உதவி இயக்குனர் குலோத்துங்கன், உதவி ஆணையர் ஹரிஹரன், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் பிரகாஷ், கோவில் செயலர் அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story