துபாயில் இருந்து குமரிக்கு வந்தவருக்கு ஒமைக்ரான்?
துபாயில் இருந்து குமரி மாவட்டம் வந்தவருக்கு ஒமைக்ரான் வைரசுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவரது சளி மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
துபாயில் இருந்து குமரி மாவட்டம் வந்தவருக்கு ஒமைக்ரான் வைரசுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவரது சளி மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து வந்தவர்
குமரி மாவட்டத்தில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் துபாயில் இருந்து குமரி மாவட்டம் வந்த 38 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கடந்த 15-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து குமரி மாவட்டம் புதுக்கடைக்கு வந்திருக்கிறார். இதை தொடர்ந்து 17-ந் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.
ஒமைக்ரான் பாதிப்பு
முன்னதாக அவருடைய தாயார் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே 2 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து 2 பேருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது துபாயில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அவர் சிகிச்சைக்காக ஒமைக்ரான் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அவரது சளி மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் ஒமைக்ரான் தொற்று அவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதே சமயம் அவருடைய தாயாருக்கு ஒமைக்ரான் வைரசுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவரது சளி மாதிரியும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story