சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 20 Dec 2021 11:56 PM IST (Updated: 20 Dec 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர்
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.    இதனையொட்டி நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகாஅபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வீதியுலா
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகளுடன் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த வீதியுலாவானது கரூர் ஜவகர்பஜார், மனோகரா ரவு-ண்டானா, காமாட்சியம்மன் கோவில், திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது பொதுமக்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மட்டையடி உற்சவம்
அதன் பின்னர் கோவில் முன்பு மாலை 3 மணியளவில் மட்டையடி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் காரணமாக தனித்தனியாக எழுந்தருளினர். அப்போது அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து, அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்தார். 
இதனை விளக்கும் விதமாக தண்டபாணி தேசிக ஓதுவார், சுந்தரராக தன்னை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார். அப்போது 2-வது முறையாக சென்ற போது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு ஆகும். 
வாழைமட்டையால் அடி
அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிக ஓதுவாருக்கு வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சண்டிகேசுவரருடன், சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும் போது அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன், சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வந்து, தங்களது முதுகினை காட்டி வாழைமட்டையால் அடி வாங்கி சென்றனர். இதன் மூலம் குழந்தை செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை
குளித்தலை அருகே சிவாலயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனுறை சிவபுரீசுவரர் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரை வணங்கினால் தில்லை நடராஜரை தரிசித்த அதே பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இந்த ஆண்டு இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு, சுந்திரசேகரர் சுவாமி நூறுகால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும். பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை பால், தயிர், நெய் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் நடராஜர் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை மலர்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை சாமியின் வீதிஉலா நடைபெற்றது. இதேபோல் குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று மதியம் பக்தர்கள் அனைவரும் இக்கோவிலுக்கு வெளியே அனுப்பப்பட்டனர். 
பின்னர் கோவிலின் பிரதான கதவு திறக்கப்பட்டு நடராஜர் அம்பாளுடன் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி தந்தார். 
லாலாபேட்டை
லாலாபேட்டை அடுத்த கருப்பத்தூரில் உள்ள சிம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவிய பொருட்களைக்கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தது.பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆரவல்லி சமேத ஆளவந் ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையடுத்து நடராஜர், சிவகாமி. ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தது. 
தோகைமலை 
தோகைமலை அருகே ஆர்டிமலை மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. தொடர்ந்து நடராஜர் ஆர்டி மலை முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சுற்றி வலம் வந்தார். பின்னர் தெப்ப குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
நொய்யல் -வேலாயுதம்பாளையம்
நன்செய் புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேகபாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணி பாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. புகழிமலை முருகன் கோவிலில் உள்ள நடராஜர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரில் அமர வைத்து வீதிஉலா நடந்தது. காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

Next Story