புதிய சாலை அமைக்க எதிர்ப்பு;கிராம மக்கள் போராட்டம்
நெய்வேலியில் லாரிகளில் நிலக்கரி எடுத்துச்செல்வதற்காக புதிய சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கம்-1 ஏ அருகில் வானதி ராயபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக என்.எல்.சி. சுரங்கம்-1 ஏ பகுதியில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, லாரிகள் மூலமாக வடலூரில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே உள்ள சாலை அருகில் புதிய சாலை அமைக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான பணி நேற்று காலை தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், புதிய சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழப்பீடு, வேலை வேண்டும்
இது பற்றி தகவல் அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கத்துறை மற்றும் நில எடுப்பு துறை அதிகாரிகள், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கிராம மக்கள், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முனபு சுரங்கம்-1 ஏ விரிவாக்கத்திற்காக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றும் வரை, புதிய சாலை அமைக்கக்கூடாது’ என்றனர்.
அதற்கு என்.எல்.சி. அதிகாரிகள், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அலுவலகத்துக்கு வருமாறு கூறினர். இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், தங்களது கிராமத்திலேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இதையடுத்து புதிய சாலை அமைக்கும் பணியை கைவிட்டு, அதிகாரிகள் சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story