தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 21 Dec 2021 1:13 AM IST (Updated: 21 Dec 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி முத்தமிழ்நகர்  அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், முத்தமிழ்நகர், திருச்சி. 

கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம்,  புதுவேட்டக்குடியில் உள்ள மணங்கான் (வலங்கான்) என்ற ஏரியில் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தர்மராஜ், புதுவேட்டக்குடி, பெரம்பலூர். 

பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்த மரம் 
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பை தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் அருகே இருந்த மரம் ஒன்று கடந்த கஜா புயலின் போது இந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.  இந்த மரம் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

ஆபத்தான நிலையில் செயல்படும் ஆய்வுக்கூடம் 
அரியலூர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் செயல்படும் ஆய்வுக்கூடத்தில் கடந்த மாதம் கடும் மழை பெய்த நிலையில் உள்பகுதி கட்டிடம் மேல் சுவர் மின்விசிறி உடன் இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிந்த பகுதி மீண்டும் சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் பழைய கட்டிடம் எப்போதும் ஆபத்தானது. எனவே மீண்டும் ஒரு ஆபத்து வராமல் இருக்க உடனடியாக ஆய்வகத்தை வேறு இடத்திற்கு மாற்றி லட்சக்கணக்கான விலை உயர்ந்த ஆய்வக எந்திரங்களையும், முக்கிய கருவிகளையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஒப்பிலாமணி, அரியலூர். 

சேறும், சகதியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, காராவயல் கிராமம் புதுக்குடியிருப்பு பகுதியில் மண் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முனுசாமி, காராவயல், புதுக்கோட்டை. 

எலும்புக்கூடான மின்கம்பம் 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மேல் சேவாபூரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து, சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேல் சேவாபூர், கரூர். 

சாலையோர கடைகளால் விபத்து 
திருச்சி வயலூர் சாலையில் உள்ள பிஷப் கல்லூரி எதிரில் சிலர் சாலையோரத்தில் வியாபாரம் செய்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இதுகுறித்து நகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சீனிவாசநகர், திருச்சி. 

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் 
புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சி, வலையம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்களின் கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவ-மாணவிகள் மீது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வலையம்பட்டி, புதுக்கோட்டை. 

நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி பஸ் நிலையத்தில் இருந்து தண்டலைபுத்தூர், நெய்வேலி, பச்சனாம்பட்டி, கோமங்கலம் வழியாக கடந்த 15 ஆண்டுகளாக திருப்பஞ்சலிக்கு மதியம் 12 மணி மற்றும் இரண்டரை மணி அளவில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பச்சனாம்பட்டி, திருச்சி.

பக்தர்களுக்கு இடையூறு 
தமிழகத்தில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்பு கேசுவரர் கோவில் கோபுரதத்தின் நுழைவு வாயில் பகுதியில்  நுழையும் வாகனங்களினால் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.  எனவே கோவில் கோபுர சந்துகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோக்களை மட்டுமே விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுவாமிநாதன். திருவானைக்காவல், திருச்சி. 

சாலையில் பள்ளம் 
திருச்சி உறையூர் கோணக்கரை சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் இந்த பள்ளத்தில் சென்றால் மாட்டிக்கொள்ளும் நிலை உள்ளது. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இந்த பள்ளத்தினால் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி.

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
திருச்சி சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை சாலை, பொன்மலைப்பட்டி சாலை, ஜீவா நகர், இந்திராநகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் அவை சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால், கருப்பு நிற மாடுகள் சாலையில் படுத்து இருப்பது தெரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோசப், ஜீவா நகர், திருச்சி.

குப்பைகளை வீதியில் வீசும் அவலம்
திருச்சி மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தினமும் முறையாக குப்பைகள் சேகரிக்க வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை சாலையில் வீசும் அவலம் உள்ளது. இதுபற்றி மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்களிடம் கூறினாலும் அவர்கள் சரியாக பதில் அளிப்பதில்லை. குப்பைகள் இல்லா வீதி என்று ஆங்காங்கே பெயர்ப்பலகை வைத்து மாநகராட்சியை சுகாதாரத்தில் முதன்மையாக மாற்ற நினைக்கும் அதிகாரிகள், எங்கள் பகுதிக்கு தினமும் குப்பைகள் வாங்க சுகாதார பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ரன்வே நகர், திருச்சி. 


Next Story