‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 Dec 2021 1:38 AM IST (Updated: 21 Dec 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவை சார்ந்த வாடிப்பட்டி ரோடு  சோழவந்தான் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இ்ங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
சங்கர் பாண்டி, வாடிப்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசுவைத்தான்பட்டி இனாம்கரிசல்குளம் தெற்கு தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது.  இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து எதுவும் ஏற்பட்டு விடுமோ என இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 
ராம்குமார், இனாம்கரிசல்குளம்.

தொற்றுநோய் பரவும் அபாயம் 

மதுரை ஜீவா நகர், தென்றல் நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக  கழிவுநீர் வெளியேறி வருகிறது. முன்பு பெய்த தொடர்மழையினால் கழிவுநீர் அதிக அளவில் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  கழிவுநீரில் விஷபூச்சிகள் மற்றும் கொசு புழுக்கள் கலந்து வருவதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாக்கடையில் அடைத்து இருக்கும் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?
அஷ்ரப், தென்றல் நகர்.

விபத்து அபாயம்

மதுரை நிலையூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளி சுற்றுச்சுவர் வழியாக உயர் மின்அழுத்த வயர்கள் செல்கிறது. இதனால் மாணவர்களுக்கு விபத்து எதுவும் நிகழ்ந்து விடுமோ என பெற்றோர் அஞ்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் உயர்அழுத்த மின்வயர்களை அந்த இடத்தில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழ் செல்வி, நிலையூர்.

கொசுக்கள் தொல்லை 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு பரவலை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

வீணாகும் குடிநீர்
மதுரை 60 அடி ரோடு பாலம் பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகிக்க பயன்படும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது. இதில் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சேதமடைந்த குழாய்களை சரி செய்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அபுபக்கர், மதுரை.

சேதமடைந்த நடைபாதை
மதுரை மாவட்டம் திருநகரில் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை சுற்றி அமைந்துள்ள நடைபாதை உடைந்தும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் பாதசாரிகள் இந்த நடைபாதையினை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நடைபாதையை சீரமைக்க வேண்டும். 
பவானி,திருநகர்.

Next Story