காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
பாண்பேப் நிலத்தை ஏலம்விட எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க.வை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, டிச.21-
பாண்பேப் நிலத்தை ஏலம்விட எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க.வை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சொத்துக்கள் ஏலம்
புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்பேப் கூட்டுறவு வங்கியின் கடன் வட்டியும் முதலுமாக ரூ.8 கோடிக்கும் மேல் உள்ளது. இந்த தொகையை திருப்பி செலுத்தாததால் கடன்பெறும்போது அடமானமாக வைக்கப்பட்ட பாண்பேப் நிறுவனத்துக்கு சொந்தமான 28 ஆயிரத்து 500 சதுரஅடி நிலத்தை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகளும், பாண்பேப் ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏலத்தை ரத்துசெய்யக்கோரி தொடர் போராட்டங்களை நடத்துவது என்று அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஏலத்தை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சிகள் சார்பில், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பிரகாஷ்குமார், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், நிர்வாகிகள் பிரபாகரன், சவரிராஜன், செந்தில்முருகன், நவீன், காங்கிரஸ் நிர்வாகி பி.எம்.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு சேதுசெல்வம், சூசி கம்யூனிஸ்டு லெனின்துரை, சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். புதுவை அரசே இந்த தொகையை வழங்கி பாண்பேப் நிறுவனத்தை மீண்டும் இயக்கிட வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அ.தி.மு.க. முற்றுகை
இதேபோல் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கைராட்டையுடன் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிச்சாமி, ராஜாங்கம், செல்வம், தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராகிணி, அதிகாரிகள் ஜோதிராஜ், செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story