கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2021 1:48 AM IST (Updated: 21 Dec 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருவையாறு;
திருவையாறு அருகே கணவன்-மனைவி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவன்-மனைவி
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள தில்லைஸ்தானம் உப்புமேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40) இவர், திருவையாறில்  செல்போன் ரீ்சார்ஜ் கடை வைத்து நடத்தி வந்தார். 
இவரது மனைவி சுதா(35). இவர்களுக்கு சூர்யா(18), சுஜிதா(10) என்ற மகள்களும், சுதர்சன்(14) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சூர்யா, கோவையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். சுதர்சன் 9-ம் வகுப்பும், சுஜிதா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். 
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலை சுரேஷ் தனது மாமியாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தெரிவித்து விட்டு போனை வைத்து உள்ளார். இதனையடுத்து சுதாவின் தாயார் கிருஷ்ணவேணி ஊரில் இருந்து புறப்பட்டு தில்லைஸ்தானத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். 
வீட்டுக்கு வந்த அவர் அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்து போனார். மகள் சுதா, மருமகன் சுரேஷ் ஆகிய இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அக்கம், பக்கத்தினருக்கு தெரிய வந்தது. 
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்தண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story