தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Dec 2021 2:10 AM IST (Updated: 21 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி 
சேலம் 4 ரோடு அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் மின்இணைப்பு பெட்டி உள்ளது. இந்த பெட்டியின் கதவு பெயர்ந்து நிலையிலும், வயர்கள் வெளியே தெரிந்தபடியும் காட்சி அளிக்கிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் இணைப்புபெட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துளசி ராமன், நான்கு ரோடு, சேலம்.

பள்ளிக்கூடத்தில் பழுதான கழிப்பறை கட்டிடம் (படம் உண்டு)
சேலம் திருச்சி கிளை ரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறை பழுதடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கழிப்பறையில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. மேலும் தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கழிவறையை சீரமைத்து தரவேண்டும்.
-அஜித், சேலம்.

மயான வசதி இல்லை
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா காட்டுக்கோட்டை ஊராட்சி, பெரியார் நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு மயான வசதி இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர்மக்கள், காட்டுக்கோட்டை, சேலம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சி 10-வது வார்டு காந்திநகரில்  குப்பைதொட்டி இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் கொட்டி வைத்துள்ளனர். இங்கிருந்து காடையாம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவுநீர் தேங்கியுள்ளதால் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணறுகளும் பாதிக்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலின் நலன்கருதி அதிகாரிகள் உடனடியாக கால்வாயை தூர்வாரி கழிவு நீர் செல்வதற்கு வாய்க்கால் அமைத்து குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கங்காதேவி, காந்திநகர், இளம்பிள்ளை.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் சிவதாபுரம் 22-வது வார்டு  சின்னகுட்டி தெருவில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்திற்கு செல்லும் இடங்களில் மின் கம்பங்களில் மின்விளக்கு இல்லை. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். 10 மாதங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தபோது அவர்கள் மின்கம்பி பொருத்திவிட்டு மின்விளக்கு பொருத்தவில்லை. எனவே விரைந்து மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சின்னகுட்டிதெரு, சேலம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெள்ளரி வெள்ளி கிராமத்தில் தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்கு எரிய செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், வெள்ளரி வெள்ளி, சேலம்.

நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் அமைந்து கோழிப்பண்ணையால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாய் உள்ளதால் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஊருக்குள் அமைந்துள்ள கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
-முருகன், போகனப்பள்ளி, கிருஷ்ணகிரி.
===
குப்பைகள் அள்ளப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் பைரமங்கலம் கிராமத்தில் கணபதி கோவில் அருகே மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். 6 மாத காலமாக குப்பைகள் இப்படி குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் பலன் இல்லை. இதற்கு தீர்வு கிடைக்குமா?
-ஊர்மக்கள், பைரமங்கலம், கிருஷ்ணகிரி.

பயன் இல்லாத அடிபம்பு  
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சி. இந்த பகுதியில் மக்கள் குடிநீருக்காக இங்குள்ள அடிபம்பை  பயன்படுத்தி வந்தனர். அந்த அடிபம்பு பயன் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அதை சுற்றியும் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.  இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அடிபம்பை சரி செய்து தர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.  
காளியம்மாள், எட்டிகுட்டப்பட்டி, ஓமலூர்.

இடியும் நிலையில் பள்ளிக்கூட சுவர் 
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் காம்பவுண்டு சுவர் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 இடங்களில் இடிந்து விழுந்து உள்ளது. தற்போது பள்ளிக்கூடம் நடைபெற்று வரும் சூழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியின் காம்பவுண்டு சுவரை அகற்றி விபத்து நடக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தீனா, வாழப்பாடி.
குடிநீர் தொட்டியின் சுற்றுசுவரில் விரிசல்
தாரமங்கலம்  பேரூராட்சியில் காவிரி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அங்கு  தண்ணீர் பிடிக்க செல்லும் மக்கள் மிக பயத்துடன் செல்கிறார்கள். மேலும் இந்த வழியாக பொதுமக்கள் அதிகம்பேர் சென்றுவருகிறார்கள். இந்த  சுற்றுச்சுவரை சீரமைத்து தரவேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து இந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரவேண்டும்.  
சங்கர், தாரமங்கலம்.

Next Story