சேலம் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


சேலம் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 21 Dec 2021 2:10 AM IST (Updated: 21 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பனமரத்துப்பட்டி, 
ஆருத்ரா தரிசனம்
சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. சேலம் அருகே கொண்டலாம்பட்டியை அடுத்த உத்தம சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரபுரநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி, சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக நாயனார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்,  பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நடராஜர் நடனமாடும் உற்சவர் சிலையும், சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மையாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சேலம், கொண்டலாம்பட்டி, பாரப்பட்டி, நெய்க்காரப்பட்டி, பூலாவரி, ஆட்டையாம்பட்டி, அரியானூர், வீரபாண்டி உள்பட ஏராளமான பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். 
விரதமிருந்த பெண்களுக்கு சாமி பாதத்தில் வைக்கப்பட்ட தாலிக்கயிறுகள் வழங்கப்பட்டன. இரவில் நடராஜர், சிவகாமி உற்சவ சாமிகள் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவில்
பனமரத்துப்பட்டி அருகே நத்தமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும். 
அதன்படி நேற்று காலை 6 மணியளவில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நடராஜருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் கனி, புஷ்பங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 
இந்த ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசத்துடனும் சாமியை தரிசனம் செய்தனர். 
சாமி திருக்கல்யாண நிகழ்வையொட்டி, 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
எடப்பாடி
எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. குறிப்பாக வெள்ளாண்டி வலசு ஆனந்த தாண்டவ நடராஜர், எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்மற்றும் பூலாம்பட்டி கைலாசநாதர் ஆகிய கோவில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வெள்ளாண்டி வலசு ஆனந்த தாண்டவ நடராஜர் கோவிலில் பக்தர்கள் அனைவரும் திருவெம்பாவைபாடி திருவீதி உலா வந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேச்சேரி
நங்கவள்ளியில் பழமையான சவுந்தரவல்லி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சாமி கோவில், மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவில், வெள்ளார் மல்லிகார்சுனர் கோவில் சிந்தாமணியூர் சரபேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சியில் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Next Story