சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.
பெரம்பலூர்:
வீதி உலா
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 39-வது ஆண்டு திருவாதிரை விழா கடந்த 2 நாட்களாக சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடராஜபெருமானுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜைகளை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பரம்பரை ஸ்தானிகம் சுவாமிநாத சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் ஆகியோர் நடத்தினர்.
நேற்று காலை நடராஜபெருமான்- சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. இதில் ஊர்வலம் மேளதாளத்துடன் எடத்தெரு, வெள்ளாளர் தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சோழிய வேளாளர் சங்க பொறுப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருக்கல்யாண உற்சவம்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள புகழ்பெற்ற தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசன விழா 2 நாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு முதல்நாள் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் உற்சவர் பஞ்சநதீஸ்வரர்- தர்மசம்வர்தினி அம்பாளுக்கு 6-வது ஆண்டு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் குரும்பலூர் பேரூராட்சி, செஞ்சேரி, பாளையம், ஈச்சம்பட்டி, புதூர், மேட்டாங்காடு, அம்மாபாளையம், கீழக்கணவாய் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன உற்சவம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் மகாதீபாராதனையும் மாலையில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகளும், ஆருத்ரா தரிசன ஊர்வலமும் நடந்தது. திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசன உற்சவ அபிஷேக, ஆராதனைகளை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணிய சிவாச்சாரியார், கார்த்திகேயசிவம் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
ஊடல் உற்சவம்
குன்னம் வட்டம் சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரியுடன் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு 108 மூலிகை திரவியங்களால் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சோடசோப மகா தீபாராதனை நடந்தது. மாணிக்கவாசகர் அருளிய தேவார பதிகம் ஒதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது. மாணிக்கவாசகருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடந்தது. இரவில் சாமி- அம்பாள் ஊடல் உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவத்தார்கள், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், அத்தியூர் சிவன் கோவில், திருமாந்துறை சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
மேலும் செட்டிகுளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் குபேர பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு மலர் அலங்காரமும், வெட்டி வேர் மாலையும் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், எசனையில் உள்ள ஞானாம்பிகை சமேத காலத்தீஸ்வரர் கோவில், அம்மாபாளையம் அருணாசலேஸ்வரர் கோவில், நக்கசேலத்தில் உள்ள துவாரகாபுரீஸ்வரர் கோவில், து.களத்தூர் விஸ்வநாதசுவாமி கோவில், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், வேப்பூர் அருணாசலேஸ்வரர் கோவில், திருவாலந்துறை சோழீஸ்வரர் கோவில், தொண்டமாந்துறை காசிவிஸ்வநாதர் கோவில், வெங்கலம் தாராபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story