ஓமலூர் அருகே 3 பசுக்கள் கத்தியால் குத்தி சாகடிப்பு போலீசார் விசாரணை


ஓமலூர் அருகே  3 பசுக்கள் கத்தியால் குத்தி சாகடிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2021 2:20 AM IST (Updated: 21 Dec 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே மர்ம நபர்கள் 3 பசுக்களை கத்தியால் குத்தி சாகடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓமலூர்,
பசுக்கள்
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் தெய்வம் (வயது 57). இவருடைய மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் சொந்தமாக 4 பசுக்களை வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு லட்சுமி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் தெய்வம் மட்டும் இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் எழுந்து பார்க்கும்போது வீட்டின் முன்புள்ள மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த 4 பசுக்களையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே தெய்வம் தனது மாடுகளை அக்கம்பக்கத்தில் தேடினார்.
கத்தியால் குத்தி சாகடிப்பு
அப்போது அவரது வீட்டின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் அவர் வளர்த்து வந்த 3 பசுக்கள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒரு மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
உடனே அவர் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 
மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 
கண்காணிப்பு கேமரா
சுடுகாடு குடியிருப்பு பகுதியையொட்டி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பூசாரிப்பட்டி கால்நடை டாக்டர் ஜானகிராமன், இறந்த 3 பசுக்களையும் பிரேத பரிசோதனை செய்தார். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு பசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. 
போலீசார் விசாரணை
இந்த கொடூர சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பசுக்களை குத்திக்கொன்ற சம்பவம், முன்விரோதத்தால் நடந்ததா? இல்லை வேறு காரணங்கள் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கால்நடை டாக்டர் ஜானகிராமன் கூறும் போது, ‘மாட்டுக்கு எந்த இடத்தில் குத்தினால் விரைவில் இறக்கும் என்பதை தெரிந்து கொண்டு தான் கொன்றுள்ளனர்’ என்றார்.  பசுமாடுகளை கழுத்தில் குத்திக்கொன்ற சம்பவம் பூசாரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story