பெலகாவி வன்முறைக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் கண்டன தீர்மானம் - அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேறியது


பெலகாவி வன்முறைக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் கண்டன தீர்மானம் - அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேறியது
x
தினத்தந்தி 21 Dec 2021 3:01 AM IST (Updated: 21 Dec 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி வன்முறை எதிராக கர்நாடக சட்டசபையில் கண்டன தீர்மானம் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்கிறது.

பெங்களூரு:

பெலகாவி யாருக்கு?

  கர்நாடகம்-மராட்டியம் மாநிலங்களின் எல்லையில் பெலகாவி அமைந்துள்ளது. அங்கு கன்னடர்களுக்கு இணையாக மராட்டிய மக்களும் வசிக்கிறார்கள். பெலகாவியை மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுகுறித்து ஆராய அமைக்கப்பட்ட மகாஜன் குழுவும், பெலகாவி கர்நாடகத்திற்கே சொந்தம் என்று அறிக்கை வழங்கியது. இருப்பினும், பெலகாவிக்கு மராட்டிய மாநிலம் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.

  பெலகாவியில் உள்ள மராட்டிய ஏகிகரண் அமைப்பினர், தொடர்ந்து கர்நாடகத்திற்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் மராட்டிய ஏகிகரண் சமிதி நிர்வாகி ஒருவர் மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசினர். இந்த நிலையில் பெலகாவியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராய்ணணாவின் சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர்.

வாகனங்கள் மீது கல்வீச்சு

  கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் மராட்டிய மாநில எல்லைக்குள் கோலாப்பூர் என்ற இடத்தில் கன்னட கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தினர். இது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கன்னட அமைப்புகள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

  இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை நேற்று காலை பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) மற்றும் காங்கிரசார் சங்கொள்ளி ராயண்ணா சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக பிரச்சினை கிளப்பினர். இது தொடர்பான விவாதத்திற்கு சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். இதன் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

  பெலகாவி கர்நாடகத்தின் இன்னொரு அதிகார மையம். அதற்காக தான் இங்கு விதான சவுதா மாதிரியில் சுவர்ண சவுதாவை கட்டி ஆண்டுதோறும் சட்டசபை கூட்டத்தொடரை நடத்தி வருகிறோம். மகாஜன் குழு, பெலகாவி கர்நாடகத்திற்கே சொந்தம் என்று கூறிவிட்டது. அதனால் இந்த எல்லை விவகாரம் முடிந்துபோன விஷயம். ஆனால் இங்குள்ள சில விஷமிகள் அவ்வப்போது எல்லை பிரச்சினையை எழுப்பி கன்னடர்களை சீண்டி பார்க்கிறார்கள். சங்கொள்ளி ராண்ணா நாட்டின் பெருமை. அவரது சிலையை சேதப்படுத்தியுள்ளனர். அதே போல் சத்ரபதி சிவாஜியும் சுதந்திரத்திற்காக போராடியவர். அவரும் மதிக்கப்பட வேண்டியவர்.

  இந்த சிலை சேதங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும். குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த வன்முறைகளுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன்.

கண்டன தீர்மானம் நிறைவேறியது

  எல்லை பிரச்சினையில் மகாஜன் குழுவின் முடிவே இறுதியானது. ஆனால் சிலர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகையவர்களை கண்டித்து தீர்மானம் கொண்டு வருகிறேன். இந்த தீர்மானத்தை அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பி வைப்போம்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  அதைத்தொடர்ந்து சபாநாயகர் காகேரி, இந்த தீர்மானத்தை அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் ஆதரித்தனர். முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

தேசத்தை அவமதிப்பதற்கு சமம்

  பெலகாவி கர்நாடகத்திற்கே சொந்தம் என்று மகாஜன் குழு கூறிவிட்டது. ஆனாலும் மராட்டிய மாநிலத்தினர் இந்த விஷயத்தில் பிரச்சினை செய்து வருவது சரியல்ல. சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா சிலையை விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இது சரியல்ல. தேசத்துரோகிகள் தான் இந்த வேலையை செய்திருப்பார்கள். தேசம் குறித்து ஒன்றும் தெரியாத முட்டாள்கள், போக்கிரிகள் இவ்வாறான அட்டகாசங்களை செய்வார்கள்.

  சங்கொள்ளி ராண்ணா, சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள். அவர்களை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதற்கு சமம். சங்கொள்ளி ராயண்ணா, சத்ரபதி சிவாஜி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். பெலகாவியில் உள்ள மராட்டிய ஏகிகரண் சமிதியினர் கன்னடர்களை அடிக்கடி கிளறி பார்க்கிறார்கள்.

தடை விதிக்க முடியுமா?

  அந்த அமைப்புக்கு தடை விதிக்க முடியுமா? என்பதை அரசு ஆராய வேண்டும். அதற்கான வாய்ப்பு இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். வரும் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்களை கண்டித்து ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மொழி, எல்லை போன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இதில் நாம் அரசியல் செய்வது இல்லை.
  இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கடும் நடவடிக்கை

  ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் உறுப்பினர் அன்னதாணி பேசுகையில், "பெலகாவியில் மராட்டிய அமைப்பினர் அடிக்கடி கன்னடர்களை சீண்டி பார்க்கிறார்கள். கன்னடர்கள் பொறுமை குணம் கொண்டவர்கள். இதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.

  கன்னடர்கள் பொங்கி எழுந்து நமது வீரத்தை காட்டினால் அப்போது தான் நமது பலம் என்ன என்பது தெரியும். சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா உயிருடன் இல்லை. ஆனால் அவர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்று நாம் கருதி வாழ்கிறோம். அத்தகையவரின் சிலையை சேதப்படுத்தியது கண்டிக்கத்தது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வன்முறையாளர்களை சுட்டு தள்ள வேண்டும்

சட்டசபையில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேசுகையில், "சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் தேசத்துரோகிகள். அவர்களை அரசு கைது செய்துள்ளது. இனிமேல் இத்தகைய சம்பவங்களை அரசு வேடிக்கை பார்க்காது. இனிமேல் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடாதவாறு அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்களை துப்பாக்கியால் சுட்டு தள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. சித்தராமையா கூறியது போல் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

கர்நாடக துண்டு அணிந்திருந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியினர்

பெலகாவி வன்முறை சம்பவம் குறித்த விவாதத்தின்போது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் தோளில் மஞ்சள், சிவப்பு வண்ண கர்நாடக துண்டை போட்டிருந்தனர். இது மற்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் அக்கட்சியின் குழு தலைவர் குமாரசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா கட்சி துண்டுடன் பசவராஜ்பொம்மை

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். பெலகாவி வன்முறை குறித்த விவாதம் நடைபெற்றபோது, அவர் தனது தோளில் காவி-பச்சை வண்ணம் கொண்ட பா.ஜனதா துண்டை போட்டிருந்தார். இது மற்ற உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. அவர் அந்த விவாதம் முடிவடையும் வரை துண்டு போட்டிருந்தார். அவர் வழக்கமாக தோளில் துண்டு போடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story