ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது லாரி மோதி தாய்-இரட்டை குழந்தைகள் சாவு
ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது லாரி மோதி தாய், இரட்டை குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதில் குழந்தைகளின் உடல்கள் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட துயரம் நடந்துள்ளது.
ஹாசன்:
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது
கர்நாடக மாநிலம் ஹாசன் (மாவட்டம்) அருகே கவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா (வயது 32). இவரது மனைவி ஜோதி (29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு பிரணதி (3), பிரணவ் (3) என்ற பிள்ளைகள் இருந்தனர். இந்த இரு குழந்தைகளும் இரட்டையர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் நேற்று சிவானந்தா தனது மனைவி, பிள்ளைகளுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஹாசன் அருகே போவனஹள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த லாரி, சிவானந்தாவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது.
3 பேர் சாவு
அத்துடன் மோட்டார் சைக்கிள், இரட்டை குழந்தைகள் ஆகியோரின் உடல்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனது. உடல்கள் சிக்கிய நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியை அதன் டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சாலை முழுவதும் ரத்தமும் சதையுமாக காட்சி அளித்தது. பலியான 2 குழந்தைகளின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இருந்தது. இதை பார்த்த பலரும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
மேலும் இந்த கோர விபத்தில் ஜோதியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சிவானந்தா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடிபோதையில்...
விபத்தை ஏற்படுத்திய லாரி மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் 3 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஹாசன் டவுன் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதுடன், இரட்டை குழந்தைகள் உள்பட 3 பேரின் உயிரை காவு வாங்கியதும் தெரியவந்தது.
மேலும் விபத்தில் இரட்டை குழந்தைகள் சிக்கியும் போதை தலைக்கேறிய நிலையில் 2 கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டி வந்ததில், குழந்தைகளின் உடல்கள் சிதைந்து கோரமானதும் தெரியவந்தது.
லாரி டிரைவர் கைது
இதையடுத்து பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் டிரைவரின் பெயர், விவரம் உடனடியாக தெரியவரவில்லை.
இந்த கோர விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story