பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயன்ற கன்னட அமைப்பினர் கைது
கர்நாடகத்தில் எம்.இ.எஸ். அமைப்பை அரசு தடை செய்ய வலியுறுத்தி, தடையை மீறி பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட பேரணியாக சென்ற கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதே போல் பெங்களூருவிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலகாவி:
கன்னட கொடி எரிப்பு
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை மாவட்டமான பெலகாவி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 13-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.இ.எஸ். அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் புகுந்த கன்னட அமைப்பினர், எம்.இ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மீது கருப்பு மை பூசினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கன்னட கொடியை எம்.இ.எஸ் அமைப்பினர், சிவசேனா தொண்டர்கள் எரித்தனர். இதற்கு கர்நாடகத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் சதாசிவநகரில் உள்ள சிவாஜி சிலை மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசினர்.
கன்னட அமைப்பினர் போராட்டம்
இதனை கண்டித்து பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் வன்முறையை அரங்கேற்றினர். கர்நாடக அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தனர். அதோடு நிற்காமல் சங்கொள்ளி ராயண்ணா சிலையை சேதப்படுத்தினர். எம்.இ.எஸ். அமைப்பினர் இந்த செயல் கர்நாடக மக்களை கொந்தளிக்க வைத்து உள்ளது. எம்.இ.எஸ். அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், கர்நாடகத்தில் எம்.இ.எஸ்.அமைப்பை அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் 20-ந் தேதி (அதாவது நேற்று) பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன.
பெலகாவிக்கு படையெடுப்பு
அதன்படி பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக பெங்களூரு, கோலார், ராமநகர், மைசூரு, துமகூரு உள்பட கர்நாடகம் முழுவதும் இருந்து பல்வேறு கன்னட அமைப்பினர் தங்களது வாகனங்களில் நேற்று முன்தினம் பெலகாவிக்கு படையெடுத்து சென்றனர். கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர்கள் பிரவீன் ஷெட்டி, நாராயணகவுடா ஆகியோர் நேற்று முன்தினமே பெலகாவிக்கு சென்று அங்கு முகாமிட்டு இருந்தனர். மேலும் பல பகுதிகளில் இருந்து கன்னட அமைப்பினர் தொடர்ந்து பெலகாவிக்கு வந்ததால் பதற்றம் உண்டானது. இதனால் பெலகாவியில் நேற்று முதல் நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
முதலில் பீரனவாடியில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலையில் இருந்து அனகோல் கனகதாசா நகரில் உள்ள சங்கொளளி ராயண்ணா சிலை வரை பேரணியாக செல்ல கன்னட அமைப்பினர் முடிவு செய்து இருந்தனர். ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் பெலகாவி அருகே உள்ள ஹிரேபாகேவாடியில் இருந்து சுவர்ண சவுதாவுக்கு பேரணி செல்ல கன்னட அமைப்பினர் முடிவு செய்தனர்.
தள்ளுமுள்ளு
இதனால் ஹிரேபாகேவாடியில் நேற்று கன்னட அமைப்பினர் குவிந்தனர். ஹிரேபாகேவாடியில் இருந்து சுவர்ண சவுதா 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஹிரேபாகேவாடியில் இருந்து பேரணியாக புறப்பட்ட கன்னட அமைப்பினர் சுவர்ண சவுதா நோக்கி பேரணியாக சென்றனர். இதில் பிரவீன் ஷெட்டி, நாராயண கவுடா உள்ளிட்டோர் கலந்தது கொண்டனர். ஹிரேபாகேவாடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்த போது கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. இதனால் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த கன்னட அமைப்பினர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் போலீசாரின் தடுப்பு கம்பிகளை தள்ளி கொண்டு முன்நோககி சென்றனர். இதனால் போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது.
முழுஅடைப்பு போராட்டம்
இதையடுத்து பிரவீன் ஷெட்டி, நாராயண கவுடா உள்பட ஆயிரக்கணக்கான கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. போலீஸ் வேனில் வைத்து பிரவீன் ஷெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, கர்நாடக அரசு எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. தவறு செய்த எம்.இ.எஸ். அமைப்பினரை விட்டுவிட்டு பேரணி சென்ற எங்களை கைது செய்து உள்ளனர். எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்யாவிட்டால் கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதுபோல எம்.இ.எஸ்.அமைப்பை தடை செய்ய கோரி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை முன்பு சிவராமேகவுடா தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது மராட்டிய முதல-மந்திரி உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சியினரின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர்.
கொடும்பாவி எரிப்பு
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசார், கன்னட அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. ஆனாலும் உத்தரவ் தாக்கரே, சிவசேனா கட்சியினர் கொடும் பாவியை கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர். தீயின் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதுபோல பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் வாட்டாள் நாகராஜ், சா.ரா.கோவிந்த் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னட அமைப்பினர் கர்நாடகத்தில் எம்.இ.எஸ்.அமைப்பை தடை செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது உத்தவ் தாக்கரேயின் உருவப்படத்தை கன்னட அமைப்பினர் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பு, ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
மந்திரிக்கு சொந்தமான கட்டிட பணிகளை தடுத்து நிறுத்திய எம்.இ.எஸ். அமைப்பினர்
கர்நாடக அறநிலையத்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சசிகலா ஜோலே. இவர் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் ரூ.50 கோடியில் ஒரு வணிக வளாகத்தை கட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த கட்டிடம் கட்டப்படும் இடத்திற்கு சென்ற எம்.இ.எஸ். அமைப்பினர் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்களை மிரட்டினர். இங்கு கட்டிடம் கட்ட கூடாது என்று கூறி தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். மேலும் அங்கிருந்த கட்டுமான பொருட்களை அடித்து, உடைத்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
புனேயில் கர்நாடக அரசு பஸ்சின் கண்ணாடி உடைப்பு
கர்நாடகத்தில் எம்.இ.எஸ்.அமைப்பை தடை செய்ய கோரி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பஸ் நிலையத்தில் யாதகிரி மாவட்டம் சுராப்புரா போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த பஸ்சின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. இது கர்நாடகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story