சட்டசபையில் மந்திரி பைரதி பசவராஜிக்கு எதிரான தர்ணா வாபஸ் - சித்தராமையா அறிவிப்பு


சட்டசபையில் மந்திரி பைரதி பசவராஜிக்கு எதிரான தர்ணா வாபஸ் - சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 3:16 AM IST (Updated: 21 Dec 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் மந்திரி பைரதி பசவராஜிக்கு எதிரான தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

தர்ணா போராட்டம்

  கர்நாடக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் பொம்மை மீதான நில முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அதற்கு சபாநாயகர் காகேரி, இந்த விவகாரம் கோா்ட்டில் உள்ளதால் இதுகுறித்து இங்கு விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி அதை நிராகரித்துவிட்டார்.

  இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபையை சபாநாயகர் காகேரி 20-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தார். அதன்படி நேற்ற சட்டசபை கூடியது. சட்டசபை கூடியதும், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

கடும் அமளி உண்டானது

  அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று 2-வது நாளாக தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். மந்திரி பைரதி பசவராஜ் மீதான நில முறைகேடு குறித்து விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. இந்த அமளிக்கு இடையே கேள்வி நேரம் நடத்தி முடிக்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து சபை உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் கூடியது. அப்போதும், காங்கிரஸ் உறுப்பினர்கள், மந்திரி பைரதி பசவராஜ் மீதான நில முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரி தர்ணா நடத்தினர். அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சங்கொள்ளி ராயண்ணா சிலை

  நில முறைகேடு புகாரில் கர்நாடக ஐகோர்ட்டு, மந்திரி பைரதி பசவராஜ் உள்பட 5 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் ஒரு எம்.எல்.சி.யும் உள்ளார். அதனால் அவரை மந்திரி பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதுகுறித்து விவாதிக்க அனுமதி வழங்க கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம்.

  இதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். அனுமதி வழங்க கோரி நாங்கள் தர்ணா நடத்தினோம். ஆனால் இதை சபாநாயகர் ஏற்கவில்லை. மாநிலத்தில் தற்போது முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதாவது சங்கொள்ளி ராயண்ணா சிலையை சேதப்படுத்தியுள்ளனர். வட கர்நாடகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை பெலகாவியில் நடக்கிறது. 24-ந் தேதி இந்த கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

விவாதிக்க முடியாது

  அதற்குள் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க முடியாது. அதனால் கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

  முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால் நாங்கள் மந்திரி பைரதி பசவராஜிக்கு எதிரான தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். அதே நேரத்தில் பைரதி பசவராஜை நீக்க கோரி நாங்கள் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story