நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற சமையல் தொழிலாளி கைது
நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சபி (வயது 27). சமையல் தொழிலாளியான இவர், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கீழ்ப்பாக்கம், ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவர், மோட்டார் சைக்கிளில் சென்ற சபியை மடக்கி சோதனை செய்தார்.
சபி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை சோதிக்க அவரை சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சாலை ஓரம் அழைத்துச்சென்றார். உடனே அவரிடம் இருந்து தப்பிச்சென்ற சபி, அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு சென்று 100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி தலையில் ஊற்றி நடுரோட்டில் தீக்குளிக்க முயன்றதாக தெரிகிறது.
அவரை தீக்குளிக்க விடாமல் காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி, சபியை டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த டி.பி.சத்திரம் போலீசார், சபியை நேற்று இரவு கைது செய்தனர்.
Related Tags :
Next Story