வெளிமாநில தொழிலாளர்களையும் சரிசமமாக கருத வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன்
வெளிமாநில தொழிலாளர்களையும் சரிசமமாக கருத வேண்டும் என்று திறனாய்வு கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
திறனாய்வு கூட்டம்
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பணித்திறனாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கா.ஜெகதீசன் வரவேற்றார். கூட்டத்தில் கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:-
சரிசமமாக கருத வேண்டும்
வெளிமாநில தொழிலாளர்களையும் நமது தொழிலாளர்களுக்கு சரிசமமாக கருதி அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய அனைத்து தொழிலாளர் நல வசதிகளான குறைந்தபட்ச கூலி, 8 மணிநேர பணி, மிகை நேரத்துக்கான இரட்டிப்பு ஊதியம், உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுதல் மற்றும் ஓய்வறை, கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றை ஆய்வின் சமயம் உறுதி செய்திட வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏதும் நிகழா வண்ணம் உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பக வசதி, கேண்டீனில் தரமான உணவு வழங்குவதை கண்காணிப்பதுடன், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையினை ஒழிக்க பாடுபட வேண்டும்.
இழப்பீட்டு தொகை
மரண விபத்து நிகழும்போது அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நிர்வாகத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீட்டு தொகையினை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த தகுந்த வழிவகை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்தி வழக்கினை வெற்றிகரமாக முடித்திட அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story