நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு


நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 21 Dec 2021 6:57 PM IST (Updated: 21 Dec 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு

விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்தால் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய வசதியாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e DPC இணையதளத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதியலாம். .
குறுஞ்செய்தி
இந்த இணையதளத்தில் சம்பா பருவத்துக்கு கடந்த 16ந் தேதி முதல் இணையவழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமத்தின் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து நெல் கொள்முதல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இதனால் விவசாயிகள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

Next Story