கள்ளக்காதலியை கழுத்தை இறுக்கி கொலை செய்த முதியவர்
கள்ளக்காதலியை கழுத்தை இறுக்கி கொலை செய்த முதியவர்
பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் 46 வயது கள்ளக்காதலியை கழுத்தை இறுக்கி கொன்ற 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
லாரி டிரைவரின் மனைவி
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் லாரி உரிமையாளர். இவருடைய மனைவி சுஜாதா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பழனி முருகன் கோவிலுக்கு செல்வதாக சுஜாதா தனது கணவரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தாராபுரம் அருகே பாலசுப்பிரமணியம் நகர் காட்டுப்பகுதியில் சுஜாதா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
கைது
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். திருப்பூரை சேர்ந்த பெண்ணை தாராபுரம் கடத்தி வந்து கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை மேற்கொண்டனர். சுஜாதா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுஜாதா தாராபுரத்தை அடுத்த சகுனிபாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி 65 என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து வேலுச்சாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சுஜாதாவை கொலை செய்ததாக வேலுச்சாமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து வேலுச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
கைதான வேலுச்சாமி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு
எனக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே எனது மனைவி இறந்து விட்டார். அதன்பிறகு பெட்டிக்கடை நடத்தி எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்சில் பழனி கோவிலுக்கு போகும்போது அதே பஸ்சில் பழனி கோவிலுக்கு வந்த சுஜாதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக பழகினோம். அந்த பழக்கம் எங்களிடையே கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அவர் அடிக்கடி பழனி கோவிலுக்கு செல்வதாக வீ்ட்டில் கூறிவிட்டு இங்கு வந்து விடுவார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம்.
கழுத்தை இறுக்கி கொன்றேன்
ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்த பிறகு சுஜாதா என்னிடம் பணம் கேட்க தொடங்கினார். நான் பணம் கொடுக்க மறுத்தேன். இந்த நிலையில் 18-ந்தேதி சுஜாதா பழனி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தாராபுரம் பஸ் நிலையம் வந்தார். அவரை வீட்டிற்கு மொபட்டில் அழைத்துச் சென்றேன். அன்று இரவு இருவரும் மது அருந்தினோம். பிறகு இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். பிறகு சுஜாதா என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பணம் கொடுக்க நான் மறுக்கவே, உனது மகளிடம் இதுபற்றி கூறி அசிங்கப்படுத்தி விடுவதாக சுஜாதா மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
நகையை எடுத்தேன்
பிறகு உடலை கோணிப்பையில் போட்டு மொபட்டில் எடுத்துச்சென்று பாலசுப்பிரமணியம் நகர் காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிட்டேன். போலீசாரை திசை திருப்புவதற்காக அவள் அணிந்த ஆடைகளை தீயிட்டுக்கொளுத்திவிட்டு அவள் அணிந்திருந்த தோடு மற்றும் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன்.
இவ்வாறு வேலுச்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து வேலுச்சாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 46 வயதான கள்ளக்காதலியை 65 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story