பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதி மாணவர்கள்-ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதி மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
திருவாரூர்:-
பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி விடுதி மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி கட்டாயம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவினை சார்ந்த சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் திட்டம்
சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தையல் எந்திரம்
முன்னதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பேருக்கு ரூ.28 ஆயிரத்து 830 மதிப்பிலான தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் சார்பில் ஒருவருக்கு இறப்பு உதவி தொகையாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் சார்பில் 5 பேருக்கு புதிய நலவாரிய அட்டையும், தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தின் சார்பில் 12 பேருக்கு புதிய நலவாரிய அடையாள அட்டையையும் அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி, முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் பிரகாஷ், உதவி கலெக்டர் பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடத்தில் பஸ்
இதனை தொடர்ந்து திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவாரூரில் இருந்து இடும்பாவனம், தில்லைவிளாகம் வழியாக முத்துப்பேட்டை வரையிலான புதிய வழி தடத்திற்கான பஸ்சினை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மகேந்திரகுமார், துணை மேலாளர் சிதம்பரகுமார், கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story