பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடு


பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடு
x
தினத்தந்தி 21 Dec 2021 8:24 PM IST (Updated: 21 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடு

ஊட்டி

ஊட்டியில் உறைபனி தாக்கம் எதிரொலியாக பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உறைபனி தாக்கம்

குளு, குளு மலைப்பிரதேசமான ஊட்டியில் உறைபனி தாக்கம் நிலை வருகிறது. இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண நிலை நிலவுவதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்பனி பொழிவு அதிகமாக இருந்தது.  

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள புல்வெளிகள் மற்றும் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப் பட்டது. வாகனங்கள் மீது உறைபனியை சுரண்டி அகற்றி அவற்றை இயக்கினார்கள். 

முன்னேற்பாடுகள் 

உறைபனி தாக்கத்தால் தோட்டக்கலை பூங்காக்களில் மலர், அலங்கார செடிகள் கருகி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காக்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூங்காவை குறிக்கும் ஆங்கில எழுத்துக்க ளான அலங்கார செடிகள் இரவில் பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்பட்டு, காலையில் வெயில் அடித்த பின்னர் அவை அகற்றப்பட்டு வருகிறது. 

 அதேபோல் இந்திய வரைபடம், தமிழ்நாடு குறியீடு பிளாஸ்டிக் கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது. காலையில் புல்வெளிகள் மீது உறை பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் பசுமையான புல்வெளிகள் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. 

புல்வெளிகள் கருகும் அபாயம்

மேலும் இந்த உறைபனியால் புற்கள் காய்ந்து கருகும் அபாயம் உள்ளது. இதைத்தடுக்க பாப்-அப் முறையில் ஸ்பிரிங்லர் மூலம் புல்வெளிகளுக்கு காலை மற்றும் மாலையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மேலும் மலர், அலங்கார செடிகளை உறைபனியில் இருந்து பாதுகாக்க வனப்பகுதிகளில் கிடைக்கும் நிழல் செடிகளான கோத்தாரி மிலார் செடிகளை சேகரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த செடிகள் மலர் மற்றும் அலங்காரச் செடிகள் மீது மூடப்படுகிறது. இரவில் மூடுவதன் மூலம் செடிகளை உறைபனி தாக்குவதை தடுக்க முடியும். நிழல் போன்று பாதுகாப்பு உள்ளதால் இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story