விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாகங்கள் சேகரிப்பு
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாகங்கள் சேகரிப்பு
குன்னூர்
குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாகங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அத்துடன் பாதை அமைப்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து
கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.
அந்த ராணுவ ஹெலி காப்டர், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகங்கள் சேகரிப்பு
மேலும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் விபத்து நடந்த பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்து வர முடியவில்லை. எனவே அதை வெட்டி எடுத்துவர முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வெல்டிங் எந்திரம் மூலம் ஹெலிகாப்டர் பாகங்களை உடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் உடைத்து சேகரிக்கப்பட்ட பாகங்களை ராணுவ வீரர்கள் மூட்டைகளில் கட்டி 2 லாரிகள் மூலம் ஏற்றிச்சென்றனர்.
வனத்துறையினர் ஆய்வு
மேலும் ஹெலிகாப்டரில் மீதமுள்ள ராட்சத பாகங்களையும் எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராட்சத பாகங்களை எடுத்துச்செல்ல பாதை அமைத்து கொடுக்கும்படி கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆய்வு செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து குன்னூர் வனச்சரக அதிகாரி சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story