தமிழரசு மாமியாரின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தமிழரசு மாமியாரின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கோவை
நுரையீரல் தொற்று காரணமாக மரணம் அடைந்த மு.க.தமிழரசுவின் மாமியாரின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மு.க.தமிழரசுவின் மாமியார் மரணம்
கோவையை அடுத்த வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம்.
இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 83). இவருடைய மகள் மோகனா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசுவின் மனைவி ஆவார்.
இந்த நிலையில் மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி நுரையீரல் பாதிப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
அங்கு நேற்று காலை அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து அவர், கார் மூலம் வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள மு.க.தமிழரசு மாமியார் இல்லத்திற்கு காலை 11.30 மணியளவில் வந்தார்.
அங்கு ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் மு.க.தமிழரசு, மோகனா தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
மு.க.ஸ்டாலினுடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரும் ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அங்கு சிறிது நேரம் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணிக்கு தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.
உடல் தகனம்
முன்னதாக காலை 10.10 மணி அளவில் ஜெயலட்சுமியின் உடலுக்கு மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியுடன் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப் பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், மெய்யநாதன், காந்தி, ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா கவுண்டர், மருதமலை சேனாதிபதி, பைந்தமிழ் பாரி, சண்முகசுந்தரம் உள்பட பலர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து அவரது உடல் பொம்மனாம்பாளையத்தில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story