தூத்துக்குடியில் மீண்டும் போதைப் பொருள் பிடிபட்டது
தூத்துக்குடியில் மீண்டும் போதைப்பொருள் பிடிபட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மீண்டும் போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேர் பிடிபட்டனர்.
போதைப்பொருள்
தூத்துக்குடியில் போதைப்பொருள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 15-ந்தேதி ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 கிலோ எடையுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான எபிடிரைன் என்ற போதைப்பொருள் பிடிபட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, கியூ பிரிவு மற்றும் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் போதைப்பொருள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கண்காணிப்பு
தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டூவிபுரம் பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அன்சர் அலி (வயது 26) என்பதும், பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருள் பாக்கெட் வைத்து இருந்ததும் தெரியவந்தது.
விசாரணை
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் மாரிமுத்து (26) மற்றும் இம்ரான்கான் (27) ஆகியோரையும் தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து மொத்தம் 3 பாக்கெட்டுகளில் 162 கிராம் பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 3 பேரையும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர். போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு பிடிபட்ட 3 பேரையும், போதைப்பொருளையும் தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட போதைப்பொருள் ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
Related Tags :
Next Story