விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
உடனடியாக ஒன்றியக்குழு கூட்டத்தை கூட்டி விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோட்டாட்சியரை சந்தித்து துணைத்தலைவர், 14 கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்ட அரங்கிற்கு வந்தனர். ஆனால் மொத்தம் 18 கவுன்சிலர்களில் துணைத்தலைவர் மற்றும் 14 கவுன்சிலர்கள் மதியம் 12.25 மணி வரை கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை.
எனவே ஒன்றியக்கழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தலைவர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் அறிவித்தனர்.
உடனடியாக நடத்த வேண்டும்
இதற்கிடையில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை மற்றும் 14 கவுன்சிலர்கள் மதியம் 12.30 மணிக்கு ஒன்றியக்குழு கூட்ட அரங்கிற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், பெரும்பாலான கவுன்சிலர்கள் உரிய நேரத்திற்கு வராததால் ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினர்.
ஆனால் அவர்கள் உடனடியாக ஒன்றியக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, உயர் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த அதிகாரி, கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடம் வரை கவுன்சிலர்கள் வராவிட்டால் கூட்டத்தை ரத்து செய்யலாம் என்று கூறினார்.
இதை கேட்ட கவுன்சிலர்கள், கிராமங்களில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் வழங்காமல் புறக்கணிப்பது ஏன்? என்றனர். அதற்கு அதிகாரி, அந்த பணிகள் துறை ரீதியாக நடைபெறுகிறது என்றார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு துணை தலைவர் பூங்கோதை(பா.ம.க.) மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. கட்சிகளை சேர்ந்த 14 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவை விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, மக்களுக்கு எதிராகவும், மக்கள் விரோத செயலிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டுகிறார். பஞ்சாயத்து சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல் படுகிறார். விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரின் நம்பிக்கையை இழந்து விட்டதால் உடனடியாக ஒன்றியக்குழு கூட்டத்தை கூட்டி ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கலெக்டர் மூலம் நடவடிக்கை
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார், இ்ந்த மனுவை மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்ற கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்று ஒன்றியக்குழு தலைவராக செல்லதுரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story