நுகர்பொருள் வாணிபக்கழக பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் விழுப்புரத்தில் இளைஞர்கள் திடீர் சாலை மறியல்


நுகர்பொருள் வாணிபக்கழக பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் விழுப்புரத்தில் இளைஞர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:02 PM IST (Updated: 21 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

நுகர்பொருள் வாணிபக்கழக பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் விழுப்புரத்தில் இளைஞர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம், 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் இந்த ஆண்டு பருவத்திற்கு நெல் கொள்முதல் பணிக்கான நேர்காணல் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதில் டிசம்பர் 21-ந் தேதி, 23, 24-ந் தேதிகளில் பருவகால பட்டியல் எழுத்தருக்கும், வருகிற 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் பருவகால காவலருக்கும் நேர்காணல் விழுப்புரம் மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணி முதல் விழுப்புரத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வரத்தொடங்கினர்.

 9 மணியளவில் திடீரென நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான அறிவிப்பை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஒட்டினர்.

சாலை மறியல்

இதை பார்த்த இளைஞர்கள் அங்குள்ள அரசு அலுவலர்களோடு வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்ததன்பேரில் காலை 9.20 மணிக்கு அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுபற்றி நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் கூறுகையில், இந்த பணிகளுக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உத்தரவின்பேரில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வந்தவுடன் மீண்டும் இப்பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Next Story