விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தற்கொலை முயற்சி


விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 21 Dec 2021 10:04 PM IST (Updated: 21 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.


விழுப்புரம், 

செஞ்சி அருகே உள்ள நாகலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரபு (வயது 35), விவசாயி. இவர் நேற்று காலை தனது மனைவி ஷாலினி, மகள் வைஷாலி (4) ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். 

அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் பிரபு ஒரு புகார் மனு அளித்தார். அதில், நான் நாகலாம்பட்டு, கஞ்சூர் ஏரிகளை மீன் குத்தகை எடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்களை வளர்த்து வருகிறேன். குத்தகை காலம் முடியும் தருணத்தில் கொரோனா மற்றும் மழை அதிகரித்ததால் குறிப்பிட்ட காலத்தில் மீன்களை பிடிக்க முடியவில்லை. 

இதனால் நான் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த 3 பேர், நான் குத்தகை எடுத்த கஞ்சூர் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்ததோடு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மீன் வலைகளையும் எடுத்துச்சென்று விட்டனர்.

 இதுபற்றி நல்லாண்பிள்ளைபெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தட்டிக்கேட்ட என்னை அவர்கள் மிரட்டி வருகின்றனர். மேலும் நான் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறச்சொல்லி தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் என்னை மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார். இந்த சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தற்கொலைக்கு முயன்ற பிரபு மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story