வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்; நண்பர் கைது
புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 29). இவர், அதே ஊரில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கீரப்பாளையம் அருகே உள்ள மழவராயநல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி அதே ஊரில் உள்ள கருவேலம் காட்டுப்பகுதியில் சுந்தரமூர்த்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நண்பர் கைது
விசாரணையில், சுந்தரமூர்த்தியை அவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் அய்யப்பன்(28) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலையில் வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக அய்யப்பன், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அய்யப்பனை கைது செய்தனர்.
போலீசிடம் அய்யப்பன் அளித்த வாக்குமூலத்தில், நானும், சுந்தரமூர்த்தியும் நண்பர்கள். எங்களது ஊரில் இருவரும் மது அருந்தினோம். போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து ஓங்கி அடித்தேன். இதில் சுந்தரமூர்த்தி இறந்து விட்டார். உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். வெளியூர் செல்வதற்காக நின்றபோது போலீசார் என்னை பிடித்து விட்டார்கள் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story