சாணார்பட்டி அருகே வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
சாணார்பட்டி அருகே வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியானார்.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியானார்.
ஆட்டோ டிரைவர்
சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்து (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் எம்.மேட்டுப்பட்டியில் உள்ள தனது பழைய தொகுப்பு வீட்டை இடித்து விட்டு, புதிய வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார்.
இதற்காக கடந்த 2 நாட்களாக அவரும், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான சேகர் (50) என்பவரும் சேர்ந்து வீட்டின் சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் அவர்கள் வீட்டின் பக்கவாட்டு சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டின் மேல்தள கான்கிரீட் சுவர் திடீரென்று இடிந்து அவர்கள் 2 பேர் மீதும் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரும் அபயகுரல் எழுப்பினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய முத்துவையும், சேகரையும் மீட்டனர்.
ஆனால் இதில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சேகர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தில் பலியான முத்துவுக்கு சுமதி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இறந்த முத்துவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story