ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை 7 மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில உணவு ஆணைய தலைவர் உத்தரவு
ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 7 மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
உணவு பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய உணவு பாதுபாப்பு சட்டத்தின்படி அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைத்திடவும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பட்டினியால் வாழ்வதை தவிர்க்கவும் பொது வினியோக திட்ட அங்காடிகள் முறையாக இயங்குவதையும், அங்காடிகளில் உள்ள முறைகேடுகளை களைவதற்கும் தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொது வினியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பது மற்றும் பதுக்குவது ஆகியவைகளை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
மேலும் பொது வினியோகத்திட்ட அங்காடிகள் மீது போதிய கண்காணிப்பு பணியும், விற்பனை முனைய எந்திரங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
புகார் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் நேரடியாக தெரிவிப்பதற்கு ஏதுவாக பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண், மாநில, மாவட்ட நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தொலைபேசி எண் 044- 28544935 ஆகியவற்றை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்கள், பழங்குடியினர், நரிக்குறவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியவர்களில் புதிய மின்னணு குடும்ப அட்டை, ஆதார் எண் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு அதனை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பணியினை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்திட வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் உணவுப்பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், திட்ட அலுவலர்கள், பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story