திண்டுக்கல்லில் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டுக்கு சீல்
திண்டுக்கல்லில் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
முருகபவனம்:
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை கோவிலும் (அபிராமி அம்மன் கோவில்), அதன் உப கோவிலாக திண்டுக்கல் பழனி சாலையில் செல்லாண்டியம்மன் கோவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 355 சதுர அடியை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டி இருந்தார்.
இதை அறிந்த கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டை மீட்க கடந்த 27.7.2021 அன்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து அந்த வீட்டை மீட்கும் நடவடிக்கையில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி, துணை ஆணையர் அனிதா தலைமையில் கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ், சந்திரமோகன், செயல் அலுவலர்கள் மகேஸ்வரி, மாலதி, சுகந்தி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீட்டை மீட்டு அதனை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையின் போது திண்டுக்கல் மேற்கு போலீசார் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story