பாச்சலூர் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கொடைக்கானல் மலைக்கிராமங்களில் போராட்டம்
பாச்சலூர் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கொடைக்கானல் மலைக்கிராமங்களில் போராட்டம் நடைபெற்றது.
கொடைக்கானல்:
பாச்சலூர் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கொடைக்கானல் மலைக்கிராமங்களில் போராட்டம் நடைபெற்றது.
மாணவி சாவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் கடந்த 15-ந்தேதி பிரித்திகா என்ற 5-ம் வகுப்பு மாணவி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தாள். அவள் எப்படி இறந்தாள்? கொலை செய்யப்பட்டாளா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனின் ஆலோசனையின்பேரில் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பல்வேறு குழுக்கள் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் போலீஸ் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
இதனால் ஆத்திரமடைந்த கொடைக்கானல் மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருசில கிராமங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். குறிப்பாக மாணவி இறந்த பாச்சலூர் கிராம மக்கள், தங்களது குழந்தைகளை ஒருவாரமாக பள்ளிக்கு அனுப்பவில்லை. மாணவி சாவில் உண்மை நிலவரம் தெரிந்தபின்னரே தங்களது குழந்தைகளை பள்ளி அனுப்புவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கிடையே போலீஸ் அதிகாரிகளும், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் பாச்சலூர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் நேற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
2-வது நாளாக போராட்டம்
கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்காலில் மாணவி சாவுக்கு நீதி கேட்டும், மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கூக்கால் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ மற்றும் அதிகாரிகள் கூக்காலுக்கு வந்து, போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது.
சாலை மறியல்
இதேபோல் மன்னவனூரில், கைகாட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தாசில்தார் முத்துராமன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் மன்னவனூர்-கொடைக்கானல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் மாணவியின் சாவுக்கு நீதிகேட்டு கொடைக்கானலில் இன்று (புதன்கிழமை) போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story