கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை என பேட்டி


கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை என பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2021 10:54 PM IST (Updated: 21 Dec 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கூறினார்

கள்ளக்குறிச்சி

புதிய போலீஸ் சூப்பிரண்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜியாவுல்ஹக் சென்னை சி.பி.சி.ஐ.டி. குற்றப்புலனாய்வு துறை சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை காவல்துறையில் ஏ.ஐ.ஜி.யாக(நிர்வாகம்) பணிபுரிந்து வந்த செல்வகுமாரை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்றுத்தொழில் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை முழுமையாக ஒழிக்கப்படும். சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றுத்தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன்மலைக்கு சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தடுக்கப்படும்.
போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீசார் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு அறிவுறுத்தப்படும். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னை நேரில் சந்தித்து புகார் கொடுக்கலாம். 

கண்காணிப்பு கேமரா

கள்ளக்குறிச்சி நகரத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்யப்படும். கள்ளக்குறிச்சி நகரத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார். முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு செல்வகுமாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்தினர்.


Next Story