தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திருக்கடையூர் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்:
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திருக்கடையூர் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்45.ஏ. நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரியும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வலியுறுத்தியும் சாலை பணிகளை செய்து வரும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், ஆனந்தன் உள்பட 150-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக்,
சீர்காழி கோட்ட வருவாய் அலுவலர் நாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணிமாறன், ஜெயந்தி, செல்வி, தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story