ஜல்லிக்கட்டு காளைகள் கழுத்தை அலங்கரிக்க தயாராகும் மணிகள்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளின் கழுத்தை அழகுப்படுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் மணி மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சிங்கம்புணரி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளின் கழுத்தை அழகுப்படுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் மணி மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
காளைகளுக்கான மணி
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வாடி மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயம் என தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்றதாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல் பகுதியில் நடைபெறும் மஞ்சுவிரட்டு புகழ்பெற்றதாகும். தை மாதம் பிறந்தாலே அந்த ஆண்டு முழுவதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்க வித, விதமான மணிகளை அதன் கழுத்தில் கட்டுவார்கள். காளையின் கழுத்தில் கட்டப்படும் மணியானது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி பகுதியில் பல ஆண்டுகளாக குலதொழிலாக நடைபெற்று வருகிறது. தை மாதம் பிறக்க இன்னும் 3 வாரமே உள்ளதால் தற்போது சிங்கம்புணரி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மணி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல வகை உண்டு
இதுகுறித்து இந்த மணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சேகர், ராஜா மற்றும் சிவா ஆகியோர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு ஆகிய போட்டியில் பங்கேற்கும் காளைகளை அழகுபடுத்துவதற்காகவும், குல வழிபாட்டிற்காக காளையின் கழுத்தில் மணிகள் கட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு காளையின் கழுத்தில் கட்டப்படும் இந்த மணியின் ஒலியை கேட்டு அந்த காளை வீரநடை போடுவதற்கு மற்றொரு காரணமாகவும் இந்த மணி விளங்கி வருகிறது.
காளைகளுக்கு கட்டப்படும் இந்த மணிகளானது கும்பகோண ஆக்க மணி, மணப்பாறை சாதா மணி, அரியக்குடி மணி என பல வகை உள்ளது. இந்த மணிகளை அரியக்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்டு அதில் பெரிய காளைகளுக்கு 13 மணிகள் கொண்டும், நடுத்தர காளைகளுக்கு 11 மணிகள் கொண்டும், இளம் காளை கன்றுகளுக்கு 9 மற்றும் 6 மணிகள் என பிரிக்கப்பட்டு அவற்றை தோளால் செய்யப்பட்ட பெல்டில் தைத்து அந்த மணிகளுக்கிடையே வண்ண நூல்களால் பந்துகள் போன்று செய்து தயாரிக்கப்படுகிறது.
விற்பனை
இதுதவிர காளைகளுக்கான சலங்கை, மூங்கனாங் கயிறு, நடு வெட்டு கயிறு ஆகியவையும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு இங்கு தயாரிக்கப்படும் இந்த மணிகளை மதுரை, வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, அய்யன் பாளையம், மணப்பாறை, திருச்சி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள காளைகளின் உரிமையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். இந்தாண்டு அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளதால் மீண்டும் மணிகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story