தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 22 Dec 2021 12:18 AM IST (Updated: 22 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி பெல்ஸ் கிரவுண்ட் 26-வது வார்டு பகுதியில் குப்பைகள் மற்றும் மழைநீர் வெளியேற்றப்படாததால் இப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், பெல்ஸ் கிரவுண்ட், திருச்சி. 
பெரம்பலூர் மாவட்டம், க.எறையூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்  ஏற்பட்டு கால்நடைகள் இறந்து வருகின்றன என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், க.எறையூர், பெரம்பலூர்.

கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், தேக்காட்டூர் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் லேணாவிளக்கு கடைவீதிகளில்  திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 7 கேமராக்கள் கடந்த 6 மாதங்களாக சரியாக இயங்காமல் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரிமளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இயங்காமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லேணாவிளக்கு, புதுக்கோட்டை.

பழுதடைந்த சங்கு மீண்டும் ஒலிக்குமா? 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி மூலமாக ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில்  தினமும் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம்1 மணி, மாலை 5 மணி, இரவு 9 மணி ௭ன சங்கு ஒலித்துக்கொண்டு இருந்தது. இது இப்பகுதியில் உள்ள மக்கள்,  வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருந்தது. தற்போது பராமரிப்பு இன்றி மிகவும் முட்புதர்கள் மண்டி செயல்படாமல் உள்ளது.  இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர். 

போக்குவரத்திற்கு இடையூறாக செயல்படும் வார சந்தை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி கடைவீதி பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் வார சந்தை நடைபெற்று வருகின்றது. இந்த வாரசந்தை நெய்தலூர்-நங்கவரம் சாலை ஓரத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்த வழியாக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரும்போது மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றது. மேலும் சந்தைக்குள் அதிக கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்று வருகின்றது. இதனால் அவசர பணிக்கு செல்வதற்கு கால தாமதம் ஆகிறது. இதனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வாரசந்தையை வேறு பகுதியில் செயல்பட வழிவகுக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நெய்தலூர், கரூர். 

சேதமடைந்த மின்கம்பம் 
திருச்சி பெல்ஸ் கிரவுண்ட் 26-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் அருகே உள்ள கம்பம் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜய் ஆனந்த், பெல்ஸ் கிரவுண்ட், திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தின் பின்புறம் பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கும்பே சேகரன், கரம்பக்குடி, புதுக்கோட்டை.

பக்தர்கள்  தங்கும் விடுதி திறக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,  சுனைப்புகழ்நல்லூர் திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள்  தங்கும் விடுதி திறக்கப்படாமல் உள்ளது.  கோவில் நடை  மதியம் 1 மணிக்கு சாத்துவதும்,  4  மணிக்கு திறப்பதும் வழக்கம். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் மண் தரையில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ஓய்வு எடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசந்தர், சுனைப்புகழ்நல்லூர், திருச்சி. 

சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தது
திருச்சி மாநகராட்சி 52-வது வார்டுக்குட்பட்ட சீனிவாசநகர் 5-வது குறுக்கு தெரு பகுதியில் 5-வது திலகர் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், அத்தெருவில் உள்ள பாதாள சாக்கடைக்கான மூடியை திறந்து அடைப்பை எடுத்து விட்டால் மட்டுமே, கழிவுநீர் வீட்டுக்குள் புகுவதை தடுக்க முடியும். சுகாதார சீர்கேட்டை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி தெருமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்கள், சீனிவாசநகர், திருச்சி.

புகையால் விபத்து ஏற்படும் அபாயம் 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்திலிருந்து கோட்டப்பாளையம் செல்லும் குறுக்கு இணைப்பு சாலையான 3 கிலோ மீட்டர் சாலை ஏரியையொட்டி செல்கிறது. ஊராட்சி குப்பைகளை இச்சாலையோரம் வழி நெடுக கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு விளைவிப்பதாக உள்ளது. வலையப்பட்டி, மாராடி, பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பகுதி மக்களின் அத்தியாவசிய சாலையான இந்த சாலையில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதினால், சாலை முழுவதும் புகைமண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால்  விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி. 

வேகத்தடை அமைக்கப்படுமா? 
திருச்சி சென்னை -பைபாஸ் ரோட்டிலிருந்து ரெயில்வே மேம்பால இறக்கத்தில் பால்பண்ணை பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் மருத்துவமனை, வணிகவளாகம், மரப்பட்டறைகள், இரும்பு கடைகள் என்று அந்த பகுதி முழுவதும் இரவும், பகலும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும். இந்த பகுதிக்கு செல்லும் வாகனங்கள் வேகம் குறையாமல் செந்தண்ணீர்புரம் மற்றும் பால்பண்ணைக்கு செல்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தடுமாறி நிலைகுலைந்து மற்ற வாகனங்களின் மீது மோதி விடுகின்றது.  இந்த விபத்தை தடுப்பதற்காக திருப்பமான இடங்களில் வேகத்தடைகள் அமைத்து அறிவிப்பு பலகைகள் வைத்தால் விபத்து நடக்காமல் பாதுகாக்கலாம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

மேம்பாலத்தில் பள்ளம் 
திருச்சி தென்னூர் - ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் நடுவில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சிலர் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுவாமிநாதன், திருச்சி.


Next Story