புலிகள் கணக்கெடுப்பு பணி ெதாடக்கம்


புலிகள் கணக்கெடுப்பு பணி ெதாடக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:40 AM IST (Updated: 22 Dec 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 
வன விலங்குகள் 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள், காட்டெருமைகள், கரடிகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வன விலங்குகளை அவ்வப்போது வனத்துறையினர் கணக்கெடுப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற ஜனவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் மெகா புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று முதல் 4 நாட்கள் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கும் பணி 
 இதையடுத்து துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவின் பேரில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையை பொறுத்தவரை 41 பீட்டுகள் உள்ளன. இந்த 41 பீட்டுகளிலும் மொத்தம் 164 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு என்ற புதிய முறையை அமல்படுத்தி கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நேர்கோட்டுப்பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் சுற்றுப்புறங்களில் காணப்படும் வன விலங்குகளையும் கணக்கெடுக்க உள்ளனர். 
முன்னோட்டம் 
அதிலும் குறிப்பாக புலிகள் எச்சங்கள், கால்தடங்கள் போன்றவையும் கணக்கெடுக்கும் பணியில் சேகரிக்க உள்ளனர். 
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 
புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஜனவரி மாதம் நடைபெற உள்ள மெகா புலிகள் கணக்கெடுக்கும் பணியின் முன்னோட்டமாக இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் 164 பேர் பங்கேற்க உள்ளனர். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story