மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது


மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது
x
தினத்தந்தி 22 Dec 2021 12:51 AM IST (Updated: 22 Dec 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விருதுநகர்,
நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 
தமிழகம் முதலிடம் 
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  
நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் வகித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 69 தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று மருத்துவக்கல்லூரியை தொடங்கினார். கடந்த 2010 -2011-ம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது காமராஜர் பிறந்த மண்ணில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த மருத்துவக்கல்லூரி தான் தற்போது இங்கு பயன்பாட்டிற்கு வர உள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. 
இந்த மருத்துவக்கல்லூரிகளை விரைந்து கட்டி முடிக்க முதல்-அமைச்சர் ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த மருத்துவக்கல்லூரிகளில் 1,450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவக்கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு 4 முறை கடிதம் எழுதினார்.மேலும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 
திறப்பு விழா 
இதனை தொடர்ந்து நானும், சுகாதாரத்துறை செயலாளரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை  சந்தித்து முதல்-அமைச்சரின் கடிதத்தை கொடுத்து நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வலியுறுத்தினோம்.
அந்த வகையில் தற்போது இந்த 11 மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா உத்தேசமாக வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. 
இந்த திறப்பு விழாவினை ஏதேனும் ஒரு புதிய மருத்துவ கல்லூரியில் நடத்த வேண்டும் என திட்டமிட்ட போது 100 சதவீத பணி முடிந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பசுமை சூழலில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் பேர் கொண்ட உள் அரங்கம் கொண்ட விருதுநகர் மருத்துவ கல்லூரியில் திறப்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்கின்றனர். அதற்காக மருத்துவக்கல்லூரி வளாகத்தையும், ஏற்பாடுகளையும் ஆய்வு செய்ய அமைச்சர்களுடன் இங்கு வந்தேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வு 
பேட்டியின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுராமன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மேகநாத ரெட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவக் கல்லூரி வளாகத்தையும், கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடைபெற உள்ள உள்அரங்கையும் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்களையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார். 

Next Story