சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதியில் இருந்து 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதி வரை சம்பளம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தும், சம்பளம் கிடைக்காததால் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் என தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
இதேபோல் நேற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் கேட்டபோது நகராட்சியில் போதிய பணம் இல்லை, வந்தவுடன் சம்பளம் போடுகிறோம் என்று கூறி அலைக்கழித்ததாகவும், சம்பளம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் குடும்பத்தை நடத்துவதாவும், அதிகாரிகளிடம் கேட்டும் உயர்த்திய சம்பளம் வழங்கவில்லை என்றும், போராடி போராடித்தான் சம்பளம் வாங்க வேண்டிய நிலை உள்ளது, என்றும் வேதனையுடன் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் சில நாட்களில் சம்பளம் கிடைத்துவிடும் என்று உறுதி அளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் புதிய நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தாமல் சென்றுவிட்டதாகவும், உழைப்புக்கான ஊதியத்தை பெற போராடுவது வேதனையாக உள்ளதாகவும் பணியாளர்கள் கூறினர். அவர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால் நிரந்தர பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story