கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு எப்போது?-தொல்லியல் அதிகாரிகள் விளக்கம்


கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு எப்போது?-தொல்லியல் அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2021 1:22 AM IST (Updated: 22 Dec 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மதுரை, 

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கீழடி

தமிழரின் நாகரிகம் பழமையானது என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள், வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள் என சொல்லிக்கொண்டே போகலாம். 
அதில் முக்கியமானது வைகை நதி நாகரிகம். இதை சிவகங்கை மாவட்டம் கீழடி மெய்ப்பிக்கிறது. அந்த ஊரின் பெயருக்கு ஏற்ப, தோண்டிப்பார்த்ததில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான எக்கச்சக்கமான ஆதாரங்கள் சிக்கின.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், யானை தந்தத்தில் ஆன பகடைக்காய்கள், தங்க ஆபரணங்கள், ஓடுகள், பல அடுக்கு கிணறுகள் என கடந்த 2015-ம் ஆண்டில் முதல் முறையாக ஒரு பழமையான நகரமே கண்டுபிடிக்கப்பட்டது.

வியப்பு

இந்த தகவல் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கு உற்சாகத்தை அள்ளித்தந்தது. தொடர்ந்து பல கட்ட அகழாய்வுகள் நடந்தன. ஒவ்வொரு முறையும் புதிய, புதிய ஆதாரங்கள் வந்து கொண்டே இருந்தன. கடைசியாக இந்த ஆண்டு 7-ம் கட்ட அகழாய்வு நிறைவடைந்தது.
சுற்றுலாத்தலமாகவும் மாறிவிட்டதால், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் கீழடிக்கு சுற்றுலா பயணிகள் தேடி வந்து, இங்கு கிடைத்துள்ள பழமையான பொருட்களையும், அகழாய்வு பணிகளையும் கண்டு வியந்து செல்கின்றனர்.

8-ம் கட்ட அகழாய்வு

இதற்கிடையே இங்கு 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் எப்போது தொடங்கும் என்பது பலரது ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கீழடியில் இதுவரை 7 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு கிடைத்த பொருட்களை பார்வையாளர்கள் எப்போதும் பார்த்து செல்வதற்காக அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தின் அருகில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது. ஆண்டுதோறும் தொல்லியல் பணிகளை ஜனவரி மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதத்தில் முடிப்போம்.
அதன்படி கீழடியிலும் வருகிற பொங்கல் பண்டிகை முடிந்ததும் பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் பெரும்பாலும் அகழாய்வு பணிகள் கிராமங்களில் தான் இருக்கும். இந்த பகுதியில் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தபின்பு, கிராமங்களில் நெல் அறுவடை பணிகளில் மக்கள் மும்முரமாகிவிடுவார்கள். அறுவடை முடிந்த பிறகு நிலங்களில் அகழாய்வு பணிகளை தொடங்குவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story