இளம்பெண் சரமாரி குத்திக்கொலை- கணவர் கைது


இளம்பெண் சரமாரி குத்திக்கொலை- கணவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 1:31 AM IST (Updated: 22 Dec 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் நடத்தை சந்தேகத்தால் இளம்பெண் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.

பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). பணகுடி அருகே உள்ள நம்பிபத்து பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (32). இவரது கணவர் இறந்து விட்டார்.

பின்னர் மாரியப்பன், அமுதாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் 2 பேரும் பணகுடி மியாபுதுக்குளம் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

மாரியப்பன் தனது மனைவி அமுதா நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

நேற்று காலையில் கோவிலுக்கு செல்லலாம் என்று மாரியப்பன் தனது மனைவியை அழைத்து சென்றார். ஊருக்கு அருகே சென்றபோது, மாரியப்பன் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அமுதாவை சரமாரியாக குத்தியாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாரியப்பன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அமுதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியப்பனை பிடித்து கைது செய்தனர்.
நடத்தை சந்தேகத்தால் இளம்பெண்ணை அவரது கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story