19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்-மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
மதுரை,
19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
தரவரிசை பட்டியல் வெளியீடு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரியில் தென்தமிழகத்தில் முதன்முறையாக அமைத்த எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மதுரையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதும் இதுவே முதல் முறை ஆகும். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 19 பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்பு படிப்பதற்காக 64 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன.
இன்று கவுன்சிலிங் தொடக்கம்
முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கான மருத்துவ படிப்பு கவுன்சிலிங் 22-ந் தேதி (அதாவது இன்று) தொடங்குகிறது. அடுத்தபடியாக பொதுப்பிரிவினருக்கு கவுன்சிலிங் தொடங்கும்.
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 11-ந் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
இதில் 98 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் 13 மாதிரிகளுக்கு முடிவுகள் பெறப்பட்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும், 8 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும் இருப்பது தெரியவந்துள்ளது, மீதியுள்ள பரிசோதனை முடிவுகள் படிப்படியாக கிடைக்கும்.
மதுரை பின்தங்கியது
தமிழகத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.1 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர். மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிகக்குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு மெகா முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆனாலும் பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு தயக்க நிலை ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. மதுரையில் முதல் தவணை தடுப்பூசி 77 சதவீதம் பேரும் இரண்டாவது தவணை தடுப்பூசி 41.82 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். இது மாநில அளவோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். எனவே அறிவார்ந்த வீரம் நிறைந்த மதுரை மாவட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மதுபிரியர்களின் கோரிக்கை ஏற்பு
மருத்துவ ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி வாரந்தோறும் 20 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகியவை சனிக்கிழமை வருகிறது.
இதுதவிர தடுப்பூசி செலுத்தினால் அசைவமும், மதுவும் அருந்த முடியாது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. எனவே பண்டிகை, அசைவ, மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை நடக்கும் மெகா தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு அந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும்.
பிரதமர் மோடி பங்கேற்கும் இடம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்களை எழுதியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். இதன் மூலம் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கும். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு 50 மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளின் திறப்பு விழா வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விருதுநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்த பின்னரே விழா நடைபெறும் இடம் குறித்து உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story