முகநூலில் நகைச்சுவை கருத்து பதிவிட்டவரை காவலில் வைக்க மறுத்த மாஜிஸ்திரேட்டு
முகநூலில் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டவரை காவலில் வைக்க மறுப்பு தெரிவித்த வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்து உள்ளது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் மதிவாணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நான் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாக என் மீது மதுரை வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-மனுதாரர் தனது மகள், மருமகனுடன் கடந்த செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சுற்றிப்பார்க்கச்சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை முகநூலில்(பேஸ்புக்) பதிவிட்டு, அதற்கு ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என நகைச்சுவையாக தலைப்பை எழுதியுள்ளார்.
இதை பார்த்த வாடிப்பட்டி போலீசார் மனுதாரர் நகைச்சுவைக்காக பதிவிட்டுள்ளார் என நினைக்கவில்லை. அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கருதி, அவர் மீது கூட்டுச்சதி, குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சி செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். அதோடு விடவில்லை. அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஆனால் அங்கிருந்த மாஜிஸ்திரேட்டு அருண், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட முடியாது என்று மறுத்துவிடுகிறார். இவரைப்போல தமிழகத்தில் உள்ள மற்ற மாஜிஸ்திரேட்டுகளும் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இதுபோன்ற சம்பவங்களில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கேட்கவே முடியாது.
ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு போலீசாரும், வக்கீல்களும் முயற்சி செய்வார்கள். ஆனால் கைதானவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடும் நடவடிக்கை சரிதானா? என மாஜிஸ்திரேட்டுகள் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். எனவே வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டு அருணின் நியாயமான நடவடிக்கைக்கு நன்றி.
இதன்மூலம் சிறையில் அடைக்கப்படுவதில் இருந்து மனுதாரர் தப்பியுள்ளார்.எனவே மனுதாரரிடம் இருந்து போலீசார் எந்த ஒரு ஆயுதத்தையும் கைப்பற்றவில்லை. போதிய ஆதாரங்கள் இன்றி அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நகைச்சுவை உணர்வுடன் இருக்க பழக வேண்டும். அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் நகைச்சுவை உணர்வை கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story