ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை -பணம் கொள்ளை
நெல்லையில் போலீஸ் நிலையம் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையில் போலீஸ் நிலையம் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓட்டல் உரிமையாளர்
நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 58). இவருடைய வீடு முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது. இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் முத்துராமலிங்கம் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிச் கொண்டு இருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கம்பிகள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
15 பவுன் நகை கொள்ளை
பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து முத்துராமலிங்கம் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, யாரோ மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லையில் போலீஸ் நிலையம் அருகேயே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story