விசாரணைக்கு வந்தவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விசாரணைக்கு வந்தவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2021 2:26 AM IST (Updated: 22 Dec 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை, 

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

விசாரணைக்கு வந்தவர் மர்ம மரணம்

மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை விசாரணைக்காக அவனியாபுரம் போலீசார் போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு அவர் இறந்துவிட்டார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால்தான் அவர் இறந்ததாகவும், அவரது உடல் பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
திடீரென இந்த மனுவை அவர் வாபஸ் பெற்றார். போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றதாக வக்கீல் ஹென்றிடிபேன், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

இதன் அடிப்படையில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக உரிய பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், பாலமுருகன் மர்ம மரணம் குறித்த வழக்கில் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story