சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Dec 2021 2:34 AM IST (Updated: 22 Dec 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகையை பறித்த மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அன்னதானப்பட்டி,
பரிகார பூஜைகள்
‌‌சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அஸ்லாம். இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஆயிஷா பீவி (வயது 24). இவர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆயிஷா பீவியும், அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். 
அப்போது அங்கு வந்த மந்திரவாதி ஒருவர் உங்கள் வீட்டில் பில்லி, சூனியம், காத்து, கருப்பு பிரச்சினைகள் உள்ளது. எனவே சிறப்பு பரிகாரம் செய்தால் உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என அவர்களிடம் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய தாயும், மகளும் மந்திரவாதியை பரிகாரம் செய்ய தங்கள் வீட்டுக்குள் அனுமதித்தனர். 
நகை பறிப்பு
தொடர்ந்து ஆயிஷா பீவி காதில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க கம்மலை தான் வைத்திருந்த பரிகார தட்டில் வைத்து, சொம்பில் போடும் படி மந்திரவாதி கூறியுள்ளார். இதையடுத்து ஆயிஷா பீவி தனது கம்மலை பரிகார தட்டில் வைத்து, பின்னர் சொம்பில் போட்டுள்ளார். பின்னர் மந்திரவாதி மந்திரங்கள் ஓதி அவர்களின் வீடு முழுவதும் புகை போட்டுள்ளார்.  இதையடுத்து உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் என அவர்களிடம் மந்திரவாதி உறுதி அளித்துள்ளார்.
அந்த சமயம் வீடு முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருந்த நேரத்தில் அந்த நகையுடன் மந்திரவாதி திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மந்திரவாதியிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாயும், மகளும் அறிந்தனர்.
மந்திரவாதிக்கு வலைவீச்சு
இதையடுத்து ஆயிஷா பீவி அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மந்திரவாதியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த மந்திரவாதி லைன்மேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் தனது கைவரிசையை காட்டி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


Next Story