தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன


தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 22 Dec 2021 2:36 AM IST (Updated: 22 Dec 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்து 13 நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது.

தஞ்சாவூர்;
தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்து 13 நாட்களுக்கு பிறகு  பஸ் போக்குவரத்து தொடங்கியது.
பழைய பஸ் நிலையம்
தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட பழைய பஸ் நிலையம் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 49 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த பழைய பஸ் நிலையத்தில் (அய்யாசாமி வாண்டையார் நினைவு பஸ் நிலையம்) 39 பஸ் நிறுத்தங்கள், 49 கடைகள், 4 பொதுக் கழிவறைகள், ஒரு கண்காணிப்பு அறை, போலீசார் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அறை, ஒரு பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
8-ந் தேதி திறப்பு
இந்த பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 8-ந் தேதி திறந்து வைத்தார். அன்றைய தினம் ஓரிரு பஸ்கள் மட்டுமே அங்கிருந்து இயக்கப்பட்டன. அதன்பிறகு இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
பஸ் நிலையத்தில் வாடகைக்கு கடைகளை ஏலம் எடுத்தவர்கள் தங்களது கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பஸ் போக்குவரத்து உடனடியாக தொடங்கப்படவில்லை. இதனால் வழக்கம்போல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தே பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ் நிலையத்தின் வழியாக பஸ்கள் சென்று வந்தன.
பஸ் போக்குவரத்து தொடங்கியது
இந்தநிலையில் 13 நாட்களுக்கு பிறகு புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது. அம்மாப்பேட்டை, திருக்கருக்காவூர், பாச்சூர், ஒரத்தநாடு, பூதலூர், வடுவூர், புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம் ஆகிய பகுதிகளுக்கு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மற்றொரு பகுதியில் இருந்து அரியலூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், சென்னை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அதே நேரத்தில் எப்போதும் பரபரப்பாக இருந்து வந்த தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையம் செயல்பட தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story